Posted in

சட்டமன்றத்தில் உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த பதிலடி; பேரவையே உறைந்த பரபரப்பு தருணம்!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய பல்வேறு விமர்சனங்களுக்கு, தவெக அரசின் பள்ளி கல்வி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசமாகவும் ஆதாரங்களோடும் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய ஆட்சி அமைந்து 40 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த 40 நாட்களில் ஏமாற்றம் மட்டுமே மிச்சம் என உதயநிதி விமர்சித்திருந்தார். இதற்குப் பேரவையில் எழுந்த அமைச்சர் ராஜ்மோகன், “மக்கள் திமுகவின் 40 நாள் அல்ல, ஐந்து ஆண்டுகால ஆட்சியையும் பார்த்துவிட்டு, அங்கு ஏற்பட்ட ஏமாற்றத்தால் தான் தவெக-விற்கு இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி திரு. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளனர்” எனப் பதிலடி கொடுத்து அவையை அதிர வைத்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், திமுக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தை முடக்கும் எண்ணம் தவெக அரசுக்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினார். ஆனால், ஒரே ஒரு குடும்பத்தில் இருந்து மட்டுமே முதலமைச்சர்கள் உருவாகும் போக்கை மாற்றி, மக்கள் மத்தியில் இருந்து ஒரு முதலமைச்சரை உருவாக்கவே இந்த புதிய சட்டமன்றம் அமைந்திருப்பதாகக் குடும்ப அரசியலைச் சாடினார். மேலும், உதயநிதி ஸ்டாலின் பெருமையாகக் குறிப்பிட்ட பள்ளி மாணவர்களின் புத்தகப் பை விவகாரத்தைக் குறிப்பிட்ட அமைச்சர், “புத்தகப் பையில் ஸ்டாலின் படம் போடவில்லை என்று பெருமைப்படும் நீங்கள், ஏன் அரசு கொடுத்த லேப்டாப்பில் மட்டும் அவரது படத்தை அச்சிட்டீர்கள்? அந்தப் படங்களை எங்கள் மாணவர்கள் தின்னர் (Thinner) வைத்து அழித்த காட்சிகளைச் சமூக வலைத்தளங்களில் அனைவரும் பார்த்தனர்” என்று அடுக்கடுக்கான சான்றுகளை முன்வைத்தார்.

சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் மின்வெட்டுப் புகார்களுக்குப் பதிலளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் இன்று இருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியே காரணம் என்று குற்றம்சாட்டினார். முத்தமிழறிஞர் கலைஞரின் வசனத்தை மேற்கோள் காட்டி, “நாங்கள் கோயில் கூடாது என்று சொல்லவில்லை; கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்றுதான் சொல்கிறோம்” எனக் கூறினார். தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில், அவர்கள் 10 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று பார்த்ததாகக் குறிப்பிட்ட அவர், “அப்போது ரிப்பன் மாளிகையின் முகவரி தெரியாமல் அன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் எங்கே போயிருந்தார்?” என்றும், “தமிழ்நாடு அலிபாபாவும் 40 திருடர்களையும் பார்த்திருக்கிறது, இப்போது ஃபியூஸ் கேரியர் திருடர்களை எங்கள் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கவனித்து வருகிறார்” என்றும் காட்டமாக விவரித்தார்.

இறுதியாக எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை அரவணைக்கக்கூடிய முதலமைச்சர் விஜய் மாமன்றத்தில் அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட ராஜ்மோகன், திமுகவினர் தொடர்ந்து அரசியல் உள்நோக்கத்தோடு மட்டுமே பேசி வருவதாகச் சாடினார். தவெக மாநாட்டில் போடப்பட்ட சோபாக்கள் மற்றும் கூட்டணித் தலைவர்களுக்குப் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், எந்தக் காலத்திலும் கூட்டணித் தலைவர்களைத் தவெக சிறுமைப்படுத்தாது என்று உறுதிபடக் கூறினார். மேலும், தவெக ஒன்றிய செயலாளர் ஒருவர் அரசுப் பள்ளிக்குச் சென்று ரீல்ஸ் (Reels) எடுத்ததற்காக நேற்றுடன் கட்சியை விட்டு நீக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தவெக அரசின் சட்ட ஒழுங்கு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கையின் தீவிரத்தை உணர்த்தி தனது 40 நிமிடப் பதிலுரையை நிறைவு செய்தார்.