6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மனநோயாளி!

6 வயது சிறுமி ஒருவர் மனநிலை பாதிப்புக்கு ஆளானவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாஹ் பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் ஒருவர் இன்று (மார்ச் 5) மதியம் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரியவந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோத்வாலி போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய 25 வயது வாலிபரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கோத்வாலி காவல் ஆய்வாளர் மிஸ்ரா கூறுகையில், சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தான் அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

சமீப நாட்களில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்ற நிகழ்வுகள் மற்றும் பாலியல் ரீதியிலான சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

மற்றொரு சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தின் பாதோகி பகுதியில் நெல் வர்த்தகர் ஒருவர் 30 வயதான திருமணமான பெண்ணை அவரின் கணவர் இல்லாத நேரத்தில் பாலியல் வன்புணர்வு செய்தார்.

அப்பெண்ணின் கணவர் விற்பனை செய்த நெல்லுக்காக பணத்தை வாங்குவதற்காக மேற்கண்ட வர்த்தகர் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாததால் அவரின் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்தார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது தன்னுடைய புகார் மனுவை காவல் அதிகாரிகள் கிழித்தெறிந்ததாக அப்பெண் குற்றம்சாட்டினார். இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சென்று முறையிட்டு தனக்கு நீதி வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து நெல் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.