வடகொரியா ஏவுகணை சோதனை: அவங்க அப்படித்தானப்பா அசால்டாக கடந்தபோன ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றை வட கொரியா சோதனை செய்துள்ளது. அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகள் மேற்கொண்டுள்ள கூட்டு ராணுவப் பயிற்சியை வடகொரியா விமர்சனம் செய்த அடுத்த நாளே இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது.

முதலில் அமெரிக்க ஊடகங்களில் வெளியான இந்த ஏவுகணை சோதனை குறித்த செய்திகள், பின்பு அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட கொரியாவின் ஆன்கோன் எனும் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று மஞ்சள் கடலில் இரண்டு சிறிய ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன, இதனால் எதுவும் மாறப்போவது இல்லை என்று இது வழக்கமாக நடக்கும் செயல்தான் என்று அவர் தெரிவித்தார்.

ஜோ பைடன் அரசு பதவி ஏற்ற பின்பு வடகொரியாவுடன் வெளியுறவுத் தொடர்புகளை புதுப்பிக்கும் முயற்சியை அமெரிக்க அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

ஐ,நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அச்சுறுத்தும் வகையில் இருக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்ய வடகொரியாவுக்கு தடைவிதித்துள்ளது.

அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் வடகொரியாவின் இந்த பாதுகாப்பு ஏவுகணை சோதனையை வழக்கமான ராணுவ நடவடிக்கை என்று தெரிவித்துள்ளனர்.

வடகொரியா மீதான கொள்கையின் மறு ஆய்வு தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், இதுதொடர்பாக ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களிடம் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.