மேட்ரிமோனியில் பழக்கம்.. தனிமையில் சந்திப்பு; 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!

மேட்ரிமோனி இணையத்தளத்தை தவறாக பயன்படுத்தி 10-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த கரண் குப்தா மேட்ரிமோனியல் இணையத்தளத்தை பயன்படுத்தி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த நபரை கடந்த சில மாதங்களுக்கு மேலாக போலீஸார் தேடி வந்தநிலையில் தற்போது கைது செய்துள்ளனர். 37வயதான கரண் குப்தா மும்பையில் உள்ள பாரம்பர்ய மிக்க நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். அதன்பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு ஹேக்கராக இருந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், கரண் குப்தா மேட்ரிமோனி இணையதளத்தில் வரன் பார்ப்பது போல் தனது புரோபைலை பதிவு செய்வார். நல்ல வசதியான பெண்கள் தான் இவரது டார்க்கெட். திருமணம் செய்துக்கொள்ள தொடர்பு கொள்ளும் பெண்களின் மொபைல் எண்ணை பெற்றுக்கொள்வார். அதன்பின்னர் அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசுவார். உங்களுடன் தனியாக பேசவேண்டும் வெளியில் பேசலாமா எனக் கேட்பார்.

தனியாக பேசினால் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளலாம் என நினைக்கும் பெண்கள் பப் அல்லது ரெஸ்டாரண்ட்களுக்கு இவரது அழைப்பின் பேரில் வருவார்கள். அவ்வாறு வரும் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அதன்பின் அந்த மேட்ரிமோனியல் சைட்டில் இருந்து புரோபைல் நீக்கிவிடுவார். அவரது மொபலை எண்ணை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆஃப் என வரும். அதன்பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண்கள் உணர்வார்கள். ஒவ்வொரு முறையும் இதேபாணியை கையாண்டுள்ளார். அவர் பயண்படுத்தும் மொபைல் எண்ணும் அவரது பெயரில் இருக்காது. போலி முகவரியில் வாங்கிய மொபைல் எண்களை பயன்படுத்தி வந்துள்ளார்.

வாடகை டாக்ஸிகளை பயன்படுத்தும்போது அந்த மொபைல் எண்களை யூஸ் செய்துள்ளார். கம்பியூட்டரில் நல்ல அறிவு உள்ளது. ஹேக்கராகவும் இருந்துள்ளார். தன்னுடைய அறிவை தவறான வழியில் பயன்படுத்தியுள்ளார். கரண் குப்தாவை மும்பையின் மலாட் பகுதியில் வைத்து கைது செய்தோம். 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இவரால் மேலும் சில பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது” எனக் கூறுகின்றனர்.

Contact Us