‘கண்டா வரச்சொல்லுங்க’ கர்ணன் பட பாடலை பாடிய பாட்டியின் அவலநிலை

தனுஷ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் மூலம் பிரபலமானவர் மாரியம்மாள். சிவகங்கை மாவட்டம் கிடாக்குழி என்ற கிராமத்தில் பிறந்தவர் மாரியம்மாள். அதனாலேயே, இவரது பெயர் கிடாக்குழி மாரியம்மாள் என்று அழைக்கப்படுகிறார்.
மாரியம்மாள் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களை பாடியிருக்கிறார். தென் மாவட்டங்களில் மாரியம்மாளின் நாட்டுப்புற பாடல்கள் பிரபலம். தமிழ் சினிமாவில், வெடிகுண்டு முருகேசன், மாதவனும் மலர்விழியும், மதுரை சம்பவம், களவாணி 2 ஆகிய படங்களில் பாடி இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னரே கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அவர் மகளுக்கு திருமணமாகி பேரன் பிறந்த நிலையில், மருமகனும் காலமாகிவிட்டார். மகள், பேரனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மாரியம்மாள் பேரனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைக்கான சென்னைக்கு குடி பெயர்ந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் கர்ணன் படம் வெளியாக இவர் பிரபலமானார். ஆனால் சினிமாவில் இவர் பாடல் பாடிய படங்கள் பலவும் கொரோனா சூழலால் வெளியாகாமல் முடங்கியுள்ளன. இதனால் பணம் எதுவும் கைக்கு வரவில்லை. கையில் இருந்த பணமும் பேரனுக்கு சிகிச்சைப் பார்த்து கரைந்துவிட்டதால் சொந்தமாக இருந்த வீட்டையும் சிகிச்சைக்கு பணமில்லாமல் விற்றுவிட்டார். நோய், தொழில் நஷ்டம் என கடுமையன நிதி நெருக்கடியால் வாடும் அவர், கடந்த மூன்று மாதங்கள் வீட்டு வாடகை கூட கொடுக்கவில்லை. இன்னும் எத்தனை கஷ்டங்களை தான் நான் தாங்குவேன், முடிந்தவர்கள் கஷ்டங்களை முடிந்த உதவிகளை செய்யுங்கள் என் பேரனை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கய்யா என்று ஒரு பேட்டியில் கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.

Contact Us