ஆயில் மசாஜ் பண்ணுவியா? இளம் பெண்ணிடம் கேட்ட போலீஸ் சஸ்பெண்ட்!

புதுச்சேரியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது கணவர் அப்பெண் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து சித்திரவதை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனது கணவர் மீது அப்பெண் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அந்த காவல்நிலைய போலீசார் குடும்ப நல நீதிமன்றத்துக்கு செல்லுமாறு அப்பெண்ணை அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனால், செய்வதறியாது லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் சண்முகம், மற்ற காவலர்களை வெளியே அனுப்பி விட்டு, அப்பெண்ணிடம் அவரது கணவரை விவாகரத்து செய்ய உதவுவதாகவும், அதற்கு பதில் தனக்கு என்ன செய்வாய் என்று கேள்வி எழுப்பியதுடன், ஆயில் மசாஜ் செய்யத் தெரியுமா என்று தகாத வார்த்தைகளில் தவறான எண்ணத்துடன் பேசியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக அப்பெண், இறைவி அமைப்பின் உதவியுடன், தலைமைக் காவலர் சண்முகம் தகாத முறையில் நடந்து கொண்டதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட அப்பெண்ணையும், இறைவி அமைப்பின் தலைவியையும் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாகவும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளுக்கு இறைவி அமைப்பின் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சண்முகம், காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அவரை பணியிடை நீக்கம் செய்து புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

Contact Us