அதிகரிக்கும் சீனா – தைவான் பதற்றம்: அடிபணியாத தைவான் என்ன நடக்கப் போகிறது ?

தைவானை சீனாவுடன் இணைக்கும் வரலாற்று பணியை நிறைவேற்றுவோம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் சூளுரைத்துள்ளது பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தீவு நாடான தைவான் உருவானது. சீனக் கடற்கரையிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தைவானை, தங்களுடைய மாகாணம் என சீனா கூறிவருகிறது. ஆனால் தைவானோ தன்னை ஒரு தனி நாடாக கருதுகிறது. இதனை ஏற்க மறுக்கும் சீனாவோ, தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் எனக் கூறிவருகிறது.

தைவான் உலக அரங்கிலும் தனி நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றிருக்கும் தைவான், படை பலத்தை பொறுத்தவரையில் அமெரிக்காவையே நம்பியிருக்கிறது. சமீப காலமாக சீன விமானப்படைகள் தைவான் வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைவது அதிகரித்து இருப்பதால், பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பதற்றம் நிலவுவதாக தைவான் பாதுகாப்பு துறை அமைச்சர் குவோ-செங் தெரிவித்து உள்ளார். 2025-ம் ஆண்டுக்குள் சீனா தங்கள் மீது படையெடுக்கும் எனக் கூறியிருக்கும் தைவான், இதனை எதிர்க்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் எனக் கூறியிருக்கிறது. இதற்கிடையே தைவான் படைகளுக்கு அமெரிக்கா பயிற்சியளித்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் சீனாவை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது.

அமெரிக்கா தைவான் உடனான அனைத்து ராணுவ உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என சீனா எச்சரித்துள்ளது. இந்நிலையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனா அமைதியான முறையில் தைவானை இணைக்க விரும்புகிறது என்றும் தைவானின் சுதந்திர பிரிவினைவாத எண்ணம் தாய்நாட்டுடன் ஒன்றிணைப்பதற்கு தடையாக உள்ளது என்றும் கூறியிருக்கிறார். சீனா தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும் எனக் கூறியிருக்கும் ஜி ஜின்பிங், தாய்நாட்டை ஒருங்கிணைக்கும் வரலாற்று பணி நிச்சயமாக நிறைவேற்றப்படும் என சூளுரைத்துள்ளார்.

இதற்கிடையே சீனா கனவு காண்கிறது எனக் கூறியிருக்கும் தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ, தலிபான்கள் வழியை பின்பற்ற ஆசை கொள்கிறது என்றும் தைவானை தங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் கூறியிருக்கிறார். தைவானை சீனாவுடன் இணைப்போம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியிருப்பது பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்க வழிவகை செய்திருக்கிறது.

Contact Us