காதலியை கூட்டு வன்கொடுமை செய்தபோது வேடிக்கை பார்த்த காதலனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

 

தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஆற்றங்கரை ஓரமாக காதலியை அழைத்துச் சென்று இருக்கிறார் காதலன். ஆனால் அவரை அடித்து தள்ளி விட்டு இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். அவர்களை அடித்துத் துரத்தி காதலியை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காரணத்திற்காக காதலனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து இருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 18 வயது நிரம்பாத மைனர் பெண் ஒருவர் தையல் பயிற்சி முடித்துவிட்டு தன் காதலனை சந்திக்க சென்றிருக்கிறார். அங்கே காதலிக்காக காத்திருந்திருக்கிறார் அந்தக் காதலர். இருவரும் பைக்கில் ஒன்றாக சென்று இருக்கிறார்கள். ஆற்றங்கரை ஓரமாக சென்றதும் பைக்கை நிறுத்திவிட்டு, ஆள் அரவமற்ற இடத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது உறவு வைத்துக் கொள்ளலாம் என்று காதலியிடம் கேட்டிருக்கிறார் காதலன். அதற்கு காதலி மறுத்து இருக்கிறார். ஆனால் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள முயற்சித்திருக்கிறார் காதலன். அந்த சமயத்தில் அங்கு வந்த 2 பேர் காதலனை தாக்கிவிட்டு அச்சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். அப்போது காதலன் அவர்களை அடித்துத் துரத்தி, அவர்களிடம் இருந்து காதலியை காப்பாற்றாமல், தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்.

அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து முடித்து விட்டு தப்பி ஓடியதும், தன் காதலியை அழைத்துக்கொண்டு போலீசிடம் சென்று புகார் அளிக்க செய்திருக்கிறார். இந்த வழக்கில் காதலனையும் போலீசார் குற்றவாளியாக சேர்த்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு காதலன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, போக்சோ சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் குற்றவாளிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் காதலன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு காதலன் காதலியை காப்பாற்றும் பொறுப்பில் இருந்து அவர் தவறி விட்டார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துவிட்டார்.

மேலும், மைனர் பெண்ணின் விருப்பத்துடன் உறவு கொண்டாலும் அது குற்றம். மேஜர் பெண்ணின் விருப்பப்படி உறவு கொண்டால் அது ஒழுக்கமின்மை என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Contact Us