கடைக்கு பம்பர்ஸ் வாங்கச் சென்றதால் கடத்தல் காரன் சிக்கிக் கொண்டான்: பிள்ளை 16 நாட்கள் பின்னர் மீட்ப்பு !

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எலி – ஜாக் தம்பதியின் மூத்த மகள் கிளியோ. புளோஹோல்ஸ் புறநகர் பகுதியில், ஒரு குடிலில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்த எலி – ஜாக் தம்பதி, ஒரு நாள் வெளியே சென்று விட்டு திரும்பியபோது, கிளியோவைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நாட்கள் நகர்ந்தனவே தவிர கிளியோவைப் பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிறுமியை பத்திரமாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆஸி., அரசுக்கு, சமூக ஊடகங்களில் கோரிக்கைகள் குவிந்தன. இதையடுத்து, கிளியோ குறித்து துப்பு கொடுத்தால் 5.5 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என, அரசு அறிவித்தது. அத்துடன் போலீஸ், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர், சிறுமி காணாமல் போன வனப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

நாட்கள் செல்லச் செல்ல, கிளியோ உயிருடன் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை குறைந்தது. இந்நிலையில், கர்னர்வன் என்ற கடலோர கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு காரணமே… சம்பந்தம் இல்லாத ஒரு 36 வயது மதிக்க தக்க நபர் ஒருவர், பரபரப்பாக வந்து கடை ஒன்றில், குழந்தைக்கு கட்டும் பம்பர்ஸ் வாங்கிச் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கடையில் வேலை பார்க்கும் பெண், பொலிசாருக்கு தகவல் வழங்கி இருந்தார். இதன் அடிப்படையில் பொலிசார் குறித்த நபரின் வீட்டை சோதனை செய்தார்கள்.

அங்கு ஒரு சிறுமி இருந்தாள். போலீசாரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்த அச்சிறுமி, ‘நான் தான் கிளியோ’ என்றாள். இதையடுத்து, சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிளியோ உயிருடன் மீட்கப்பட்டதைக் கேட்டு அவளது பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். கர்னர்வன் கிராமத்தினர் வீதிகளில் குவிந்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.18 நாட்களுக்குப் பின், கிளியோ உயிருடன் மீட்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டு மழை குவிந்து வருகிறது. இதற்கிடையே கிளியோவை கடத்தியது தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us