உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள மூன்று அடுக்கு வணிக வளாகத்தில் நேற்று மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபாத்தில் சிக்கி, மாணவர்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அலிகஞ்ச் செக்டார்-டி பகுதியில் உள்ள உஷா மேத்தா மார்க்கில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ‘ஹெட் ஹாப்பர் ஸ்டுடியோ’ (Head Hopper Studio) என்ற 3D அனிமேஷன் மற்றும் கேமிங் பயிற்சி மையமும், ‘லேர்னிங் ஸ்பேஸ்’ (Learning Space) என்ற பயிற்றுவிப்பு மையமும் இயங்கி வந்தன. கோடை விடுமுறை மற்றும் உள்ளிருப்புப் பயிற்சிக்காக (Internship) 35-க்கும் மேற்பட்ட இளம் மாணவ, மாணவிகள் அங்குத் திரண்டிருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று மதியம் சுமார் 2:30 மணியளவில் கட்டிடத்தின் அடித்தளத்தில் (Basement) உள்ள ஒரு செல்லப்பிராணிகள் விற்பனைக் கடையில் (Pet Shop) ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு (Short Circuit) காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்டிடத்தில் இருந்த மரச்சாமான்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் நெருப்பு மளமளவென மேல் தளங்களுக்கும் பரவியது. இதனால் சில நிமிடங்களிலேயே முழு கட்டிடத்தையும் கரும்புகை சூழ்ந்துகொண்டதால், உள்ளே இருந்த மாணவர்களுக்கு வெளியேறும் வழி தெரியாமல் கடும் திணறலும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிய மாணவர்கள் பலர் கட்டிடத்தின் ஜன்னல் வழியே அலறியடித்தபடி உதவி கோரினர். இதில் தப்பிக்க வேறு வழியில்லாத 7 முதல் 8 மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் இருந்து கீழே குதித்தனர். அவ்வாறு குதித்தவர்களில் ஒரு மாணவர் கீழே இருந்த இரும்புக் கிரில் கம்பியின் மீது விழுந்து படுகாயமடைந்தார்; மற்றொருவர் எரியும் மின்சாரக் கம்பியைப் பிடித்துக் கீழே இறங்க முயன்றதில் கைகள் கடுமையாகக் கருகின. கரும்புகையின் நச்சுத்தன்மையைத் தாங்க முடியாமல் வேறு சில மாணவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள கழிவறைக்குள் (Bathrooms) பூட்டிக்கொண்ட நிலையில், அவர்களும் புகையிலேயே மூச்சுத்திணறிப் பரிதாபமாகப் பலியாகினர்.
தகவலறிந்து வந்த 14-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், என்.டி.ஆர்.எஃப் (NDRF) மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் (SDRF) மீட்புக்குழுவினர் பல மணி நேரம் போராடித்தான் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் பின்பக்கச் சுவரை உடைத்து, உள்ளே சிக்கியிருந்தவர்களின் உடல்களையும், காயமடைந்த 9 பேரையும் மீட்டு கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக (KGMU) அதிர்ச்சி சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தோருக்கு ₹50,000 நிதியுதவியும் அறிவித்துள்ளார். குடியிருப்புப் பகுதிக்கான வரைபடத்தில் அனுமதி பெற்று வணிக வளாகமாக மாற்றப்பட்ட இந்த விதியின் மீறல் தொடர்பாகப் கட்டிட உரிமையாளர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.